Friday, November 4, 2011

என்னை யாரோடும் ஒப்பிட முடியாது. கார்த்தி


தலைதீபாவளி கொண்டாடி இருக்கிற இளசுகளின் தலைவர் இப்போது கார்த்திதான். முதல் படமான "பருத்திவீரன்' முதல் கடைசியாக வெளிவந்த "சிறுத்தை' வரை தேர்ந்தெடுத்து ஹிட் கொடுக்கும் கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் நம்பிக்கை. ஏ.வி.எம்.மில் நடந்து கொண்டிருந்த "சகுனி' படப்பிடிப்பில் சந்தித்தோம்.

அதென்ன படத்துக்கு "சகுனி'ன்னு பேரு?

அதானே.. பார்த்தா ஏதோ வில்லன் ரேஞ்சுக்கு இருக்கு இல்ல?! ரொம்பக் கரடுமுரடா எல்லாம் முதல் ரெண்டு படத்துலேயே பண்ணியாச்சு. "பையா'வுல கூட பொறுப்பில்லாம இருக்கிற மாதிரிதான் இருக்கும். ஆனா "சகுனி' முழுக்க வேற மாதிரியான படம். மகாபாரதத்துல கிருஷ்ணருக்குப் போட்டியா வருபவர் சகுனி. அவர் வர்ற எல்லா இடங்களுமே கலகலப்பா இருக்கும். அவர் யார் தலையையாவது உருட்டிக்கிட்டே இருப்பார். ஆனா அவர் டென்ஷன் ஆக மாட்டார்.

படத்துல அவ்வளவு தந்திரங்கள் இருக்கு. கிராமத்துல இருந்து நகரத்துக்கு வர்ற என்னோட பயணம்தான் கதை. ஆனா படத்துல நான் சந்திக்கிற மனிதர்கள், சம்பவங்கள், பிரச்னைகள், அதுக்கான தீர்வுகள்னு நிறைய விருந்து ரசிகர்களுக்காகக் காத்திருக்கு. நாசர் சார், கோட்டா சீனிவாசராவ், ராதிகா, ரோஜா, மும்தாஜ்னு அவ்வளவு கேரக்டர்கள் இருக்காங்க. இவங்களுக்கு இந்த சகுனியால என்னென்ன பிரச்னைகள் வருது, அதுக்கு எப்படித் தீர்வு கிடைக்குதுன்னு சொல்லியிருக்கோம். படத்துல நிறைய அரசியல் இருக்கு. ஆனா இதுஅரசியல் படமில்லை.

படத்துல வேற என்ன ஸ்பெஷல்?

இந்தப் படத்துல சந்தானம் ரொம்ப ஸ்பெஷல். படம் முழுக்கவே என் கூட வர்றார். "சிறுத்தை' மாதிரியே இந்தப் படத்துலேயும் எங்களோட காமெடி ரொம்ப பேசப்படும்.

படத்துல அவரும் நானும் சேர்ந்து அடிக்கிற லூட்டி நிச்சயம் பரபரப்பா பேசப்படும்னு நினைக்கிறேன்.

திருமணத்திற்கு முன், திருமணத்திற்கு பிறகு.. என்ன வித்தியாசம்?

நிறைய இருக்கே! ம்ம்.. நான் ஷூட்டிங் முடிஞ்சா நேரா வீட்டுக்குப் போற டைப்தான். ஆனா இதுக்கு முன்னாடி ஷூட்டிங் எத்தனை மணிக்கு முடிஞ்சாலும் அதைப் பற்றியெல்லாம் பெருசா கவலை ஏதும் இருக்காது. ஆனா, இப்போ அப்படி இருக்க முடியலை. நமக்காக ஒருத்தி வீட்ல காத்துக்கிட்டு இருக்கான்னு உள்மனசுல அலாரம் அடிக்கும். ஷூட்டிங் சமயத்துல 11 மணியைக் கடந்து போகும். நான் வீட்டிற்குப் போகும் வரைக்கும் ரஞ்சனி சாப்பிடாமல் காத்துக்கிட்டிருக்கிறது இன்னும் கவலையைத் தரும். அதனால சீக்கிரமா முடிச்சிட்டு வீட்டுக்குப் போகணும்னு இன்னும் பொறுப்புகள் கூடியிருக்கு.

குடும்பத்துல பாதி பேர் எப்பவும் பிஸியாயிருக்கீங்க. சந்திச்சுக்கிறது, பேசறதெல்லாம் எப்போ?

இரை தேடப் பறவைகள் உலகம் முழுக்க பறந்து திரிஞ்சாலும், திரும்பவும் கூட்டுக்கு திரும்பித்தானே ஆகணும்? எங்க எல்லாருக்கும் தனித்தனியா நேரங்கள் கிடைக்கும்.

ஆனா எல்லாரும் சேர்றது டின்னருக்குதான். குறைந்தபட்சமா சனிக்கிழமை சாயந்தரமாவது எல்லாரும் சேர்ந்து டின்னர் சாப்பிடுவோம். அது வீட்லேயேவா இல்லை ஹோட்டலாங்கறதெல்லாம் எங்க வீட்டு பெரிய மனுஷங்க தியா, தேவ் கைலதான் இருக்கு. என்ன மெனு, எங்கே போறோம்ங்கறதெல்லாம் அவங்களோட செலக்ஷன்தான். எங்களை அப்படித்தான் எங்க அப்பா கொண்டாடினார்.

சிவக்குமார், சூர்யா, ஜோதிகான்னு சாதிச்ச குடும்பம். இதில் உங்களோட லெவல் என்ன? என்னைக்காவது உங்களை இவங்களோட கம்பேர் பண்ணியிருக்கீங்களா?

எப்பவுமே கிடையாது. முதல் படம் "பருத்தி வீரன்' பண்ணும்போது அந்தப் படம் மட்டும்தான் என்னோட இலக்கு. நிச்சயமா ஜெயிக்கும்னு தெரியும். ஆனா அவ்வளவு வரவேற்பு கிடைக்கும்னு எதிர்பார்க்கல.

அந்தப் படத்துக்காக ஓடிக்கிட்டு இருக்கும்போது மனசுல வேற எதுவுமே தெரியலை. முழுக்க அந்தப் படத்தோட ஞாபகம் மட்டும்தான். ஆனா "பருத்தி வீரன்' ரிலீஸôகறதுக்கு முன்னாடியே "ஆயிரத்தில் ஒருவன்'ல கமிட் ஆகியாச்சு. செல்வராகவன் சார் எடுக்கப் போற காட்சியைச் சொல்லிட்டு, ""இதுதான் இந்தக் கேரக்டர். இதை இப்படிச் செய்தால் நல்லாயிருக்கும். உன்னால இதை இன்னும் நல்லா பண்ண முடிஞ்சா, என்ன தோணுதோ அதை இன்னும் பெட்டரா பண்ணு..''ன்னு சொல்வார். நிறைய புதுசு புதுசா கத்துக்கிறதுக்கான வாய்ப்புகள் அதிகமிருந்தது. "பையா' வேற மாதிரியான ட்ரீட். லிங்குசாமி சார் கொடுத்த சுதந்திரம், அவருக்குள்ள தீயாய் வேலைப் பார்க்கிற இயக்குநர் பிசாசுன்னு நிறைய புது அனுபவங்கள்.

ரொம்ப கம்மியான படங்கள்லதான் இதுவரை நடிச்சிருக்கேன். ஆனா இப்போ கிடைச்சிருக்கிற பேர் ரொம்ப பெருசுன்னு நிச்சயமா புரியுது. இதுவரைக்கும் சம்பாதிச்சிருக்கிற மனுஷங்களையும், எடுத்திருக்கிற பெயரையும் தக்க வெச்சுக்கிறதுக்காகவே ரொம்ப உழைக்கிறேன். இதுல என்னை யாரோடும் ஒப்பிட முடியாது. அதுக்கான நேரமும் இல்லை. என்னோட அடுத்த படத்துல "சிறுத்தை'யின் உயரத்தைத் தாண்டணும். ஒவ்வொரு படமும் பேசப்படணும். நிறைய கனவுகள் இருக்கு பாஸ்..

சரி.. உங்களுக்குன்னு அளவெடுத்து தைச்ச சட்டை மாதிரி உங்க படங்கள் இருக்கே.. கதையை எப்படி தேர்ந்தெடுக்குறீங்க?

ரொம்ப சிம்பிள் சார்.... கதையைக் கேட்கும்போதே... இது நம்ம கதைதானே இதை நாம செஞ்சா நல்லாயிருக்குமேன்னு தோணனும். ஒரு இயக்குநர் கதை சொல்லும்போதே நான் விஷுவலா யோசிச்சுப் பார்ப்பேன். எப்போ அந்த ஷாட்ல நாம நடிப்போம்னு தோணுச்சுன்னா அந்தக் கதைதான் என்னை உடனே இம்ப்ரஸ் செய்யும். மணி சார் அடிக்கடிச் சொல்வார், "ஒரு ஸீனை எழுதும்போதே இதை எப்போ படமாக்கப் போறோம்னு மனசு கிடந்து தவிக்கணும்'னு..

அப்படித்தான். ஒரு கதையைக் கேட்டதில் இருந்து அதை படமா பார்க்கிற வரைக்கும் மனசு துடிக்கணும். "சகுனி' படம் முடிச்சுட்டு அடுத்து சுராஜ் இயக்கத்துல ஒரு படம் செய்யறேன். வழக்கமான சுராஜ் ஸ்டைல் அதிரடி கலாட்டாக்களுடன் கதை பிரமாதமாயிருக்கு. "சகுனி' ஆடிட்டு வர்றேன் காத்திருங்க!

No comments:

Post a Comment